வியாழன், செப்டம்பர் 19, 2013

தத்துவங்களின் ஆதாரம்

இந்தியாவின் கலாசார பெருமைகளை இந்தியர்களே மறந்துவிட்டிருந்த காலத்தில் அதன் சிறப்புகளை மேற்கத்திய நாடுகளில் நிலைநாட்டியவர் சுவாமி விவேகானந்தர். 1893ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய பாராளுமன்றத்தில் இந்து சமயத்தின் உயர்வுகளை, அதுவரை இந்து சமயத்தையும் அதன் சித்தாந்தங்களையும் இகழ்ந்து பேசி வந்த மேற்கத்திய அதிமேதாவிகளிடையே (அதிகப்பிரசங்கிகளிடையே?) உரக்க எடுத்துரைத்தார். அவர் அங்கு நிகழ்த்திய ஒற்றை சொற்பொழிவே அவரை உலக அரங்கில் உயரத்தில் ஏற்றி வைத்தது. ஒற்றை சொற்பொழிவில் உலக அளவில் உயர்ந்தது என்று இன்று வரை சுவாமி விவேகானந்தரைத் தவிர உலகில் எவரையுமே குறிப்பிட முடியாது.

சுவாமி விவேகானந்தர்
 அவர் சிகாகோ சென்றிருந்தபோது ஒரு நாள் ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரு அமெரிக்க வாலிபர்கள் விவேகானந்தரையும் இந்திய தத்துவங்களையும் ஏளனம் செய்ய எண்ணினர். மேற்கத்திய தத்துவப் புத்தகங்களை எடுத்து வந்து பகவத் கீதையின் மேல் வைத்துவிட்டு ஏளனமாக சிரித்தனர். அவர்களில் ஒருவன், "பார்த்தீர்களா சுவாமி, இந்தியா மட்டுமல்ல இந்தியாவின் தத்துவங்களும்கூட மேற்கத்திய தத்துவங்களிடம் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறது. உங்கள் புனித நூலும் எங்கள் தத்துவங்களின் அடியில் சிக்கித்தான் உள்ளது" என்றான்.

விவேகானந்தரோ அமைதியாக அடியில் இருத்த பகவத் கீதையை உருவினார். இதனால் அதன் மேல் இருந்த மேற்கத்திய தத்துவ நூல்கள் சரிந்து கிழே விழுந்தன. பின் அவ்விளைஞர்களைப் பார்த்துக் கூறினார், "உங்கள் தத்துவங்களும் இதை போலத்தான். இந்தியாவும் அதன் தத்துவங்களும் இல்லாவிடில் உங்கள் தத்துவங்களும் இது போலத்தான் சரிந்து விழும்" என்று. மூக்கறுபட்ட அவ்விரு இளைஞர்களும் விவேகானந்தரிடம் மன்னிப்புக்கோரிவிட்டு அந்தப் பூங்காவிலிருந்து அமைதியாக வெளியேறினர்.