வியாழன், ஜூன் 04, 2015

இந்(தி/து)யா

நம்ம சுப்பிரமணிய சுவாமி எது சொன்னாலும் அத ஊதி ஊதி பெருசா ஆக்கிடறாங்க நம்ம மக்கள். அப்படி அவரு என்னய்யா சொல்லிட்டாரு? இந்தியாவுல இருக்குற எல்லாருமே இந்துக்கள் தான் அப்படின்னு சொல்லிட்டாராமா... அதுக்கு சிலர் தைய்யா தக்கான்னு குதிக்கறாங்க.

ஒரு அமெரிக்கா குடிமகனை 'அமெரிக்கன்'னு சொல்றோம். அதே மாதிரி, இந்துஸ்தான் (அட... நம்ம நாடோட இன்னொரு பேரு தாங்க...) நாட்டின் குடிமக்கள் அனைவரும் 'இந்து'க்கள்னு அவர் சொல்லி இருக்கார்... இதுக்கு போய் கூச்சல் போடறீங்களே... என்னம்மா நீங்க... இப்படி பண்றீங்களேமா...

செவ்வாய், ஜூலை 22, 2014

நம்மை நாமே அறிந்திலோம்

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்று ஏக்கத்தோடு பாடினார் பாரதி. ஒருவழியாக அவரது ஏக்கமும் சுதந்திர தாகமும், ஆங்கிலேய ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை அடைந்த போது தணிந்தன. இந்தியாவின் சாபக்கேடு ஆங்கிலேயர்களோடு ஒழிந்தது என்று எண்ணி மக்கள் குதூகலித்தனர். ஆனால் அவர்கள் அறிந்திருக்கவில்லை மிகப்பெரிய சாபக்கேடு இனிதான் வரவிருக்கிறது என்பதை.

இந்தியா முன்னேற வேண்டும் என்றால் அதற்கு மேற்கத்திய சித்தாந்தமே உகந்தது என்ற நேருவின் கருத்து இந்தியாவின் நவீன சாபக்கேட்டுக்கு வித்தாக அமைந்தது. சுதந்திரத்திற்கு முன் காந்தியவாதியாக இருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரானதும் காந்தியவாதக் கொள்கைகளை மூட்டை கட்டி பரணில் விட்டெறிந்துவிட்டு மேற்கத்தியக் கொள்கைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தார். பின்னே, லண்டனில் படித்தவராயிற்றே! இந்தியாவின் தனிப்பெரும் கலாசாரம் சரியத் தொடங்கியது அப்போதுதான்.

உலகிலேயே மிகப்பெரிய இனா-வானா யார் என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் பதில் கூறலாம், இந்தியன் என்று. வேறெப்படிச் சொல்ல? எவனோ ஜான் டால்டன் என்ற ஒருவன் அணுவைக் கண்டறிந்தானாம். அப்போது அணுவைப் பிளக்கவே முடியாது என்று கூறியபோது அதற்கு நம்மவர்கள் ஆமாம் சாமி போட்டார்கள். பின்னர் மேற்கத்திய அடிமுட்டாள்கள் அதிமேதாவிகள் பலர் இணைந்து அணுவைப் பிளக்க முடியும்; அதன்மூலம் பேராற்றலை வெளிப்படுத்த முடியும் என்று மாற்றிச் சொன்னார்கள். அதற்கும் நம்மவர்கள் ஆமாம் சாமி போட்டார்கள். ஜான் டால்டனுக்கு கிட்டத்தட்ட பதினேழு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த அவ்வையார் "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்" என்று கூறியதிலிருந்தே அணுவைப் பிளக்க முடியும் என்பது இந்தியாவில் வேத காலம் முதலே அறியப்பட்டிருந்தது என்பது தெரியவில்லையா?

கிரேக்க நாட்டை சேர்ந்த ஹிப்போக்கிரேட்டிஸ் (கி.மு. 400) என்பவர் உடல்நல குறைவு என்பது சாபத்தாலோ பில்லி சூனியத்தாலொ வருவதல்ல; இயல்பான உடல் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல்களாலும் சத்து குறைபாட்டாலுமே ஏற்படுகிறது என்று கண்டறிந்தார். அதுதான் மேற்கத்திய உலகில் மருத்துவத்துறையின் துவக்கம். அதனாலேயே மருத்துவ மாணவர்கள், கல்வி முடியும் போது ஹிப்போக்கிரேட்டிஸ் பெயரில் உறுதிமொழி எடுக்கிறார்கள். ஆனால் சுஷ்ருதர் (கி.மு. 600) என்ற இந்திய மருத்துவ மேதை தனது மருத்துவக் குறிப்புகளில் (சுஷ்ருத சம்ஹிதா) 1120 நோய்களை பற்றியும் 721 மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய அடிமுட்டாள்கள் அதிமேதாவிகள் உடல்நலக் குறைவு எதனால் ஏற்படுகிறது என்று ஒரு முடிவுக்கு வருவதற்கு சுமார் 200 வருடங்களுக்கு முன்பே நோய்களையும் அதற்கான தீர்வுகளையும் அக்கு வேறாக ஆணி வேறாக ஆராய்ந்திருக்கின்றனர் (அக்காலத்து) இந்திய மருத்துவர்கள். இதையெல்லாம் மறந்து ஹிப்போக்கிரேட்டிஸ்தான் மருத்துவத் துறைக்கு தந்தை என்று மேற்கத்திய அடிமுட்டாள்கள் அதிமேதாவிகள் கூறினால்... வேறென்ன... அதற்கும் ஆமாம் சாமி போடுவோம்; அவர் பெயரிலேயே நம் நாட்டு மருத்துவ மாணவர்களும் உறுதிமொழி எடுக்கச் செய்வோம்.

பித்தாகரஸ் தேற்றத்தை யார் உருவாக்கியது என்று கேட்டால் அத்தனை பேரும் சொல்லும் பதில் பித்தாகரஸ் என்ற கிரேக்க கணிதவியலாளர் என்பதுதான். ஆனால், முதன்முதலில் அந்த தேற்றத்தை ஏட்டில் எழுதியவர் புத்தாயனர் (கி.மு. 800) என்ற இந்திய கணித மேதை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவரது காலம் பித்தாகரஸின் காலத்திற்கு கிட்டத்தட்ட 230 ஆண்டுகள் முந்தையது. பண்டைக்காலத்தில் உலகப்புகழ் வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்களில் பித்தாகரஸும் ஒருவர். கல்வி முடிந்து அவர் நாட்டிற்குச் சென்று இங்கு கற்ற தேற்றத்தை அங்கு சொல்ல, அதற்கு அவரது நாட்டினர் அவர் பெயரையே வைத்துவிட்டனர். பிறகு அது ஐரோப்பா முழுதும் பரவி, ஆங்கிலேயர்களோடு திரும்பவும் இந்தியாவிற்கே  வந்தது. அந்த தேற்றம் நாம் உருவாக்கியது என்பதையே நாம் அப்போது மறந்து விட்டிருந்த காரணத்தால், அதை பித்தாகரஸ் தேற்றம் என்றே நாமும் ஒப்புக்கொண்டோம். ஆனால் இன்று உண்மை தெரிந்த பின்பும் அதை பித்தாகரஸ் தேற்றம் என்றே குறிப்பிடுவது நமது அடிமைத்தனத்தின் அடையாளமாகவே திகழ்கிறது. 

ஆங்கிலேயன் நம் நாட்டை நம்மிடம் ஒப்படைத்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், ஆங்கிலேய ஆட்சியின் எச்சமாகவே இன்றைய கல்வியும், அதில் கற்பிக்கப்படும் பாடங்களும், நம் நாட்டின் சட்டங்களும் அமைந்துள்ளன. ஆங்கிலேய சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நமது சட்டங்களை மாற்ற வேண்டும் என்று 60 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் சலசலப்பு எழ ஆரம்பித்திருக்கிறது. ஆங்கிலம் கற்பது அவசியமே என்றபோதிலும் தாய்மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தையே போற்றுவது மூடத்தனம். உலக அரங்கில் ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது அவனது தேசியமும் மொழியுமே. சீனர்களும் ஜப்பானியர்களும் உலகமே வியக்கும் வண்ணம் முன்னேறியதற்கு, அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை பேணி காத்ததே முக்கிய காரணமாகும். அதையே நாம் புறக்கணித்தால் உலகில் நம்மை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வது? பிரிட்டனின் முன்னாள் அடிமை நாட்டின் குடிமகன் என்றா?

மேலே சொன்னவை உதாரணங்கள் மட்டுமே. நம் நாட்டின் வரலாற்றை ஆராய்ந்தால் இதுபோல் பல உதாரணங்கள் கிடைக்கும். இப்படியே நம் பாரம்பரியம் ஒவ்வொன்றையும் நாமே மறந்து, மேற்க்கத்தியக் கொள்கைகளிலேயே தொற்றிக் கொண்டிருந்தால் நம் நாடு முன்னேறுவது, நமது கனவிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் மட்டுமே நடக்கும். நம் நாடு முன்னேற, நமது நாட்டின் பெருமைமிகு வரலாற்றையும் நமது பாரம்பரியத்தின் மகத்துவத்தையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்றுப் பாடங்களில் அலெக்ஸாண்டர், நெப்போலியன், ஹிட்லர் போன்றவர்களின் புகழை மட்டும் பாடிக் கொண்டிராமல் அசோகர், ஹர்ஷவர்தனர், கரிகாலன், ராஜராஜன், சத்ரபதி சிவாஜி போன்றோரின் பெருமைகளையும் விரிவாக விளக்க வேண்டும். ஆயுர்வேத மேதைகளான சுஷ்ருதர், சரகர் போன்றோர்களைப் பற்றியும் கணித மேதைகளான ஆர்யபட்டா, புத்தாயனா, பாணினி போன்றோர்களைப் பற்றியும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். மேற்க்கத்திய நாடுகளின் கொள்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் ஆமாம் சாமி போடுவதை நிறுத்த வேண்டும். பள்ளியிலேயே மாணவர்களிடையே நம் சரித்திரத்தையும் பாரம்பரியத்தையும் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதை சரிவர செய்தலே நம் நாடு முன்னேற திடமான அஸ்திவாரமாக அது அமையும்.

வெள்ளி, டிசம்பர் 27, 2013

சாணக்கியன் சொல்

யாராவது புத்திசாலித்தனமாக செயல்பட்டால் "சாணக்கியன் போல்" என்று சொல்கிறோம். தந்திரத்திலும் சிறந்ததை "சாணக்கிய தந்திரம்" என்றே கூறுகிறோம். அந்த அளவிற்கு அறிவாண்மைக்கும் தந்திரத்திற்கும் பெயர் பெற்றவர் சாணக்கியர்.

சாணக்கியர்
சந்திர குப்த மௌரியரின் அரசவையில் அமைச்சராக விளங்கி குப்தப் பேரரசை நிறுவ சந்திர குப்தருக்கு பேருதவியாக திகழ்ந்தார். அவர் இயற்றிய "அர்த்த சாஸ்திரம்" ஒரு நாட்டு அரசின் செயல்பாடுகள் எவ்விதம் இருக்க வேண்டும் என்று வரையறுக்கிறது. அன்றைய அரசாட்சி அரசுகளுக்கு மட்டுமல்லாது இக்காலத்தின் மக்களாட்சி அரசுகளுக்கும் அர்த்த சாஸ்திரத்தின் கோட்பாடுகள் பொருந்தும்.

அவரது கூற்றுகள் பொருள் பொதிந்தவையாக இருக்கும். சமீபத்தில் ஒரு வலைப்பூவில் (ஆங்கிலத்தில்) படித்த சாணக்கியரின் சிந்தனைகள் கீழே தமிழில்.1. பிறரது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவற்றை அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொள்ள ஒரு ஆயுள் போதாது.
2. மிதமிஞ்சிய நேர்மை ஆபத்தானது. நேரான மரங்களே முதலில் வெட்டப்படும்; நேர்மையான மனிதர்களே முதலில் குறிவைக்கப்படுவார்கள்.
3. பாம்பு விஷமுடையதானாலும் அதை வெளிக்காட்டக் கூடாது.
4. ஒவ்வொரு நட்புக்கு பின்னும் சுயநலம் உண்டு; சுயநலமற்ற நட்பு என்பது இல்லை. இது ஒரு கசப்பான உண்மை.
5. ஒரு செயலை தொடங்கும் முன் உங்களை நீங்களே மூன்று கேள்விகள் கேட்டுக்கொள்ளுங்கள்:
     (i)   இதை நான் ஏன் செய்கிறேன்?
     (ii)  இதன் முடிவு என்னவாக இருக்கும்?
     (iii) இதில் நான் வெற்றியடைய இயலுமா?
6. அச்சம் அருகில் வந்தால் அதை தாக்கி அழியுங்கள்.
7. இளமையே உலகின் மிகப்பெரிய சக்தி.
8. ஒரு செயலை துவங்கிய பின் அச்சம் கொண்டு அதை கைவிட வேண்டாம். தொடர்ந்து உழைப்பவர்களே மகிழ்ச்சியானவர்களாக உள்ளனர்.
9. மலரின் மணம் காற்றின் திசையில் மட்டுமே பரவும்; மனிதர்களின் நற்குணம் எத்திக்கும் பரவும்.
10. கடவுள் சிலைகளில் இல்லை; உங்கள் உணர்வுகளே இறைவன்; உங்கள் ஆன்மாவே கோயில்.
11. செயல்களால் மட்டுமே மனிதன் மேன்மையடைகிறான்; பிறப்பால் அல்ல.
12. உங்களைவிட உயர்ந்தவர்களிடமும் தாழ்ந்தவர்களிடமும் நட்பு கொள்ளாதீர்கள்; அவை உங்களுக்கு துன்பத்தையே தரும்.
13. உங்கள் குழந்தைகளை ஐந்து வயது வரை கொஞ்சுங்கள்; பத்து வயது வரை கண்டியுங்கள்; பதினாறு வயதிற்கு பின் நண்பனாக நடத்துங்கள். உங்கள் பிள்ளைகளே உங்களின் சிறந்த நண்பர்கள்.
14. முட்டாளுக்கு புத்தகங்கள், குருடனுக்கு கண்ணாடியை போல.
15. கல்வியே ஒருவனுக்கு சிறந்த நண்பன்; கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு; கல்வி இளமையையும் அழகையும் விஞ்சிவிடும்.

வியாழன், செப்டம்பர் 19, 2013

தத்துவங்களின் ஆதாரம்

இந்தியாவின் கலாசார பெருமைகளை இந்தியர்களே மறந்துவிட்டிருந்த காலத்தில் அதன் சிறப்புகளை மேற்கத்திய நாடுகளில் நிலைநாட்டியவர் சுவாமி விவேகானந்தர். 1893ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய பாராளுமன்றத்தில் இந்து சமயத்தின் உயர்வுகளை, அதுவரை இந்து சமயத்தையும் அதன் சித்தாந்தங்களையும் இகழ்ந்து பேசி வந்த மேற்கத்திய அதிமேதாவிகளிடையே (அதிகப்பிரசங்கிகளிடையே?) உரக்க எடுத்துரைத்தார். அவர் அங்கு நிகழ்த்திய ஒற்றை சொற்பொழிவே அவரை உலக அரங்கில் உயரத்தில் ஏற்றி வைத்தது. ஒற்றை சொற்பொழிவில் உலக அளவில் உயர்ந்தது என்று இன்று வரை சுவாமி விவேகானந்தரைத் தவிர உலகில் எவரையுமே குறிப்பிட முடியாது.

சுவாமி விவேகானந்தர்
 அவர் சிகாகோ சென்றிருந்தபோது ஒரு நாள் ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரு அமெரிக்க வாலிபர்கள் விவேகானந்தரையும் இந்திய தத்துவங்களையும் ஏளனம் செய்ய எண்ணினர். மேற்கத்திய தத்துவப் புத்தகங்களை எடுத்து வந்து பகவத் கீதையின் மேல் வைத்துவிட்டு ஏளனமாக சிரித்தனர். அவர்களில் ஒருவன், "பார்த்தீர்களா சுவாமி, இந்தியா மட்டுமல்ல இந்தியாவின் தத்துவங்களும்கூட மேற்கத்திய தத்துவங்களிடம் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறது. உங்கள் புனித நூலும் எங்கள் தத்துவங்களின் அடியில் சிக்கித்தான் உள்ளது" என்றான்.

விவேகானந்தரோ அமைதியாக அடியில் இருத்த பகவத் கீதையை உருவினார். இதனால் அதன் மேல் இருந்த மேற்கத்திய தத்துவ நூல்கள் சரிந்து கிழே விழுந்தன. பின் அவ்விளைஞர்களைப் பார்த்துக் கூறினார், "உங்கள் தத்துவங்களும் இதை போலத்தான். இந்தியாவும் அதன் தத்துவங்களும் இல்லாவிடில் உங்கள் தத்துவங்களும் இது போலத்தான் சரிந்து விழும்" என்று. மூக்கறுபட்ட அவ்விரு இளைஞர்களும் விவேகானந்தரிடம் மன்னிப்புக்கோரிவிட்டு அந்தப் பூங்காவிலிருந்து அமைதியாக வெளியேறினர்.

திங்கள், ஜூலை 08, 2013

சக்தியின் வடிவம்


இந்து தர்மத்தில் உருவ வழிபாடு மிகவும் முக்கியமானது. பிற தர்மங்களில் உருவ வழிபாடு இல்லை என்றும் உருவ வழிபாட்டு முறையே முட்டாள்தனமானது என்றும் கூறுவது சரியல்ல. இதை விளங்கிக்கொள்வதற்கு உருவ வழிபாட்டின் அவசியத்தை நாம் அறிய வேண்டும்.

நிறைந்த ஞானம் கொண்ட தவ யோகிகள் கடவுளை மனதாலேயே தியானிக்க முடியும். ஆனால் ஒரு பாமரன் கடவுளை வழிபட வேண்டுமென்றால் அவனது அறிவிற்கேற்ப கடவுளை அவனுக்கு உணர்த்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் உருவ வழிபாட்டு முறை. பாமரனின் சிற்றறிவிற்குப் புலப்படும் வகையில் இறைவனை சிலையாக வடித்து வைத்தால், இறைவனை வணங்க அவனுக்கு சுலபமாக இருக்கும்.

உருவ வழிபாடு என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது. இஸ்லாமியர்கள் மெக்கா உள்ள திசையை நோக்கித் தொழுவதும், கிறிஸ்த்தவர்களின் சிலுவையும் ஒரு வகையில் உருவ வழிபாட்டு முறைகளே.
இந்து தர்மத்தில் சிவனைத் தவிர அனைத்து கடவுள்களும் சிலை வடிவில்தான் வணங்கப்படுகின்றனர் . சிவபெருமான் மட்டுமே லிங்க வடிவில் வணங்கப்படுகிறார். இதைப் பற்றி பல கதைகள் கூறப்படுகிறது. லிங்கம் என்பது சக்தியின் வடிவம். சமஸ்க்ருத மொழியில் 'லிங்கம்' என்றால் 'உருவம்' என்று பொருள்.


சிவலிங்கம் இந்த அண்டத்தில் நிறைந்திருக்கும் சக்தியின் வடிவம். இந்த அண்டத்தில் உள்ள மாபெரும் சக்திகள் அணைத்தும் லிங்க வடிவிலேயே உள்ளன. இதற்கு சிறந்த உதாரணங்கள்: அணு உலை, அணுகுண்டு.

அணுகுண்டு
அணு உலை

இந்து தர்மத்தில் கடைபிடிக்கப்படும் நம்பிக்கைகள் அனைத்தும் (சில அறிவிலிகளால் இடையில் பரப்பப்பட்ட பல முட்டாள்தனங்களைத் தவிர) அறிவியல் பூர்வமானவை. அவை, அன்றைய பாரதத்தில் இருந்த அறிவியல் வளர்ச்சியை பறைசாற்றும். அவற்றை அறிந்து பாதுகாப்பது நம் கடமை.