செவ்வாய், ஜூலை 22, 2014

நம்மை நாமே அறிந்திலோம்

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்று ஏக்கத்தோடு பாடினார் பாரதி. ஒருவழியாக அவரது ஏக்கமும் சுதந்திர தாகமும், ஆங்கிலேய ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை அடைந்த போது தணிந்தன. இந்தியாவின் சாபக்கேடு ஆங்கிலேயர்களோடு ஒழிந்தது என்று எண்ணி மக்கள் குதூகலித்தனர். ஆனால் அவர்கள் அறிந்திருக்கவில்லை மிகப்பெரிய சாபக்கேடு இனிதான் வரவிருக்கிறது என்பதை.

இந்தியா முன்னேற வேண்டும் என்றால் அதற்கு மேற்கத்திய சித்தாந்தமே உகந்தது என்ற நேருவின் கருத்து இந்தியாவின் நவீன சாபக்கேட்டுக்கு வித்தாக அமைந்தது. சுதந்திரத்திற்கு முன் காந்தியவாதியாக இருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரானதும் காந்தியவாதக் கொள்கைகளை மூட்டை கட்டி பரணில் விட்டெறிந்துவிட்டு மேற்கத்தியக் கொள்கைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தார். பின்னே, லண்டனில் படித்தவராயிற்றே! இந்தியாவின் தனிப்பெரும் கலாசாரம் சரியத் தொடங்கியது அப்போதுதான்.

உலகிலேயே மிகப்பெரிய இனா-வானா யார் என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் பதில் கூறலாம், இந்தியன் என்று. வேறெப்படிச் சொல்ல? எவனோ ஜான் டால்டன் என்ற ஒருவன் அணுவைக் கண்டறிந்தானாம். அப்போது அணுவைப் பிளக்கவே முடியாது என்று கூறியபோது அதற்கு நம்மவர்கள் ஆமாம் சாமி போட்டார்கள். பின்னர் மேற்கத்திய அடிமுட்டாள்கள் அதிமேதாவிகள் பலர் இணைந்து அணுவைப் பிளக்க முடியும்; அதன்மூலம் பேராற்றலை வெளிப்படுத்த முடியும் என்று மாற்றிச் சொன்னார்கள். அதற்கும் நம்மவர்கள் ஆமாம் சாமி போட்டார்கள். ஜான் டால்டனுக்கு கிட்டத்தட்ட பதினேழு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த அவ்வையார் "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்" என்று கூறியதிலிருந்தே அணுவைப் பிளக்க முடியும் என்பது இந்தியாவில் வேத காலம் முதலே அறியப்பட்டிருந்தது என்பது தெரியவில்லையா?

கிரேக்க நாட்டை சேர்ந்த ஹிப்போக்கிரேட்டிஸ் (கி.மு. 400) என்பவர் உடல்நல குறைவு என்பது சாபத்தாலோ பில்லி சூனியத்தாலொ வருவதல்ல; இயல்பான உடல் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல்களாலும் சத்து குறைபாட்டாலுமே ஏற்படுகிறது என்று கண்டறிந்தார். அதுதான் மேற்கத்திய உலகில் மருத்துவத்துறையின் துவக்கம். அதனாலேயே மருத்துவ மாணவர்கள், கல்வி முடியும் போது ஹிப்போக்கிரேட்டிஸ் பெயரில் உறுதிமொழி எடுக்கிறார்கள். ஆனால் சுஷ்ருதர் (கி.மு. 600) என்ற இந்திய மருத்துவ மேதை தனது மருத்துவக் குறிப்புகளில் (சுஷ்ருத சம்ஹிதா) 1120 நோய்களை பற்றியும் 721 மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய அடிமுட்டாள்கள் அதிமேதாவிகள் உடல்நலக் குறைவு எதனால் ஏற்படுகிறது என்று ஒரு முடிவுக்கு வருவதற்கு சுமார் 200 வருடங்களுக்கு முன்பே நோய்களையும் அதற்கான தீர்வுகளையும் அக்கு வேறாக ஆணி வேறாக ஆராய்ந்திருக்கின்றனர் (அக்காலத்து) இந்திய மருத்துவர்கள். இதையெல்லாம் மறந்து ஹிப்போக்கிரேட்டிஸ்தான் மருத்துவத் துறைக்கு தந்தை என்று மேற்கத்திய அடிமுட்டாள்கள் அதிமேதாவிகள் கூறினால்... வேறென்ன... அதற்கும் ஆமாம் சாமி போடுவோம்; அவர் பெயரிலேயே நம் நாட்டு மருத்துவ மாணவர்களும் உறுதிமொழி எடுக்கச் செய்வோம்.

பித்தாகரஸ் தேற்றத்தை யார் உருவாக்கியது என்று கேட்டால் அத்தனை பேரும் சொல்லும் பதில் பித்தாகரஸ் என்ற கிரேக்க கணிதவியலாளர் என்பதுதான். ஆனால், முதன்முதலில் அந்த தேற்றத்தை ஏட்டில் எழுதியவர் புத்தாயனர் (கி.மு. 800) என்ற இந்திய கணித மேதை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவரது காலம் பித்தாகரஸின் காலத்திற்கு கிட்டத்தட்ட 230 ஆண்டுகள் முந்தையது. பண்டைக்காலத்தில் உலகப்புகழ் வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்களில் பித்தாகரஸும் ஒருவர். கல்வி முடிந்து அவர் நாட்டிற்குச் சென்று இங்கு கற்ற தேற்றத்தை அங்கு சொல்ல, அதற்கு அவரது நாட்டினர் அவர் பெயரையே வைத்துவிட்டனர். பிறகு அது ஐரோப்பா முழுதும் பரவி, ஆங்கிலேயர்களோடு திரும்பவும் இந்தியாவிற்கே  வந்தது. அந்த தேற்றம் நாம் உருவாக்கியது என்பதையே நாம் அப்போது மறந்து விட்டிருந்த காரணத்தால், அதை பித்தாகரஸ் தேற்றம் என்றே நாமும் ஒப்புக்கொண்டோம். ஆனால் இன்று உண்மை தெரிந்த பின்பும் அதை பித்தாகரஸ் தேற்றம் என்றே குறிப்பிடுவது நமது அடிமைத்தனத்தின் அடையாளமாகவே திகழ்கிறது. 

ஆங்கிலேயன் நம் நாட்டை நம்மிடம் ஒப்படைத்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், ஆங்கிலேய ஆட்சியின் எச்சமாகவே இன்றைய கல்வியும், அதில் கற்பிக்கப்படும் பாடங்களும், நம் நாட்டின் சட்டங்களும் அமைந்துள்ளன. ஆங்கிலேய சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நமது சட்டங்களை மாற்ற வேண்டும் என்று 60 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் சலசலப்பு எழ ஆரம்பித்திருக்கிறது. ஆங்கிலம் கற்பது அவசியமே என்றபோதிலும் தாய்மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தையே போற்றுவது மூடத்தனம். உலக அரங்கில் ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது அவனது தேசியமும் மொழியுமே. சீனர்களும் ஜப்பானியர்களும் உலகமே வியக்கும் வண்ணம் முன்னேறியதற்கு, அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை பேணி காத்ததே முக்கிய காரணமாகும். அதையே நாம் புறக்கணித்தால் உலகில் நம்மை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வது? பிரிட்டனின் முன்னாள் அடிமை நாட்டின் குடிமகன் என்றா?

மேலே சொன்னவை உதாரணங்கள் மட்டுமே. நம் நாட்டின் வரலாற்றை ஆராய்ந்தால் இதுபோல் பல உதாரணங்கள் கிடைக்கும். இப்படியே நம் பாரம்பரியம் ஒவ்வொன்றையும் நாமே மறந்து, மேற்க்கத்தியக் கொள்கைகளிலேயே தொற்றிக் கொண்டிருந்தால் நம் நாடு முன்னேறுவது, நமது கனவிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் மட்டுமே நடக்கும். நம் நாடு முன்னேற, நமது நாட்டின் பெருமைமிகு வரலாற்றையும் நமது பாரம்பரியத்தின் மகத்துவத்தையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்றுப் பாடங்களில் அலெக்ஸாண்டர், நெப்போலியன், ஹிட்லர் போன்றவர்களின் புகழை மட்டும் பாடிக் கொண்டிராமல் அசோகர், ஹர்ஷவர்தனர், கரிகாலன், ராஜராஜன், சத்ரபதி சிவாஜி போன்றோரின் பெருமைகளையும் விரிவாக விளக்க வேண்டும். ஆயுர்வேத மேதைகளான சுஷ்ருதர், சரகர் போன்றோர்களைப் பற்றியும் கணித மேதைகளான ஆர்யபட்டா, புத்தாயனா, பாணினி போன்றோர்களைப் பற்றியும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். மேற்க்கத்திய நாடுகளின் கொள்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் ஆமாம் சாமி போடுவதை நிறுத்த வேண்டும். பள்ளியிலேயே மாணவர்களிடையே நம் சரித்திரத்தையும் பாரம்பரியத்தையும் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதை சரிவர செய்தலே நம் நாடு முன்னேற திடமான அஸ்திவாரமாக அது அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக